கோவை,
கோவையில் காலியிடத்துக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சுந்தராபுரம் பகுதியில் மினி தியேட்டர் கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் அங்குள்ள 2 பேரிடம் 39 சென்ட் காலி நிலத்தை வாடகைக்காக பெற்றார். அதில் கட்டிடம் கட்டுவதற்கு, காலியாக கிடக்கும் அந்த பகுதிக்கு மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும்.
எனவே பிரகாஷ், சுந்தராபுரத்தில் உள்ள வரிவசூல் மையத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் யமுனாதேவி (வயது 59) என்பவரை அணுகினார். அவர் அந்த காலியிடத்துக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.45 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு அவர் ரூ.40 ஆயிரம் கொடுப்பதாக கூறியதாக தெரிகிறது. ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக கூடுதல் சூப்பிரண்டு ராஜேசை சந்தித்து, புகார் செய்தார்.
இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரகாசிடம் கொடுத்து அதை யமுனாதேவியிடம் கொடுக்குமாறு கூறினர்.
இதையடுத்து பிரகாஷ், யமுனாதேவியை தொடர்பு கொண்டு பணம் கொண்டு வருவதாக கூறினார். அதற்கு அவர் அலுவலகத்துக்கு வர வேண்டாம், அருகே உள்ள பேக்கரிக்கு வருமாறு கூறினார். அவரும், அங்கு சென்று யமுனாதேவியிடம் ரூ.40 ஆயிரத்தை கொடுத்தார். அதை அவர் வாங்கியதும் அங்கு மறைந்து இருந்த போலீசார் யமுனாதேவியை கைது செய்தனர்.
கைதான யமுனாதேவி பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.