தமிழக செய்திகள்

பெங்களூரில் இருந்து காரில் கடத்தப்பட்ட 405 கிலோ குட்கா பறிமுதல் – இளைஞர் கைது

காரை சோதனை செய்ததில், 21 மூட்டைகளில் சுமார் 405 கிலோ அளவில் குட்கா கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் வெள்ளக்கல் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில், இரவில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த காரை சோதனை செய்ய போலீசார் நிறுத்த முயன்றனர்.

ஆனால், போலீசாரை கண்டதும் காரை ஓட்டி வந்த டிரைவர், அருகிலிருந்த ஜருகு சாலையில் வேகமாக சென்று தப்பிக்க முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை துரத்தினர்.

தப்பிச் செல்லும் போது, ஜருகு சாலையில் காரை திருப்ப முயன்றபோது, சாலையோர பாறையில் மோதி கார் நின்றது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

காரை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 21 மூட்டைகளில் சுமார் 405 கிலோ அளவில் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மும்பை மாநிலம் ஜாலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப்சிங் (21) என்பவரை தொப்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும், காருடன் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள கார் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.