சென்னை,
சென்னையில் 41 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். அலுவலக பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12-ந் தேதி ஆகிய நாட்களில் ரெயில் தண் டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கமும் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தங்களின் அவசரப் பயணங்களை 10:30 மணிக்கு முன்பாகவே முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆயிரக்கணக்கான பயணிகள் காலை 10 மணிக்கு முன்பாகவே தாம்பரம் ரெயில் நிலையத்தில் திரண்டனர். ஒரே நேரத்தில் வழக்கத்திற்கு மாறாகப் பெருந்திரளான மக்கள் கூடியதால், டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் நடைமேடைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ரெயில்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். பயணிகளின் சிரமத்தைக் குறைக்க தாம்பரம்-செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் திருமால்பூர் ஆகிய பகுதிகளுக்கு இடையே குறிப்பிட்ட கால இடைவெளியில் தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. மதியம் 3:30 மணிக்கு மேல் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் மின்சார ரெயில் சேவைகள் மீண்டும் வழக்கம்போல் தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.