கோவை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந் தேதி நடந்தது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களிக்க 3 ஆயிரத்து 540 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிகளில் காலை முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். குறிப்பாக இளம் வாக்காளர்கள் திரளாக வந்தனர்.
இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் 84.72 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் மாவட்டத்தில் 13,22,759 ஆண்கள், 14,21,179 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 534 பேர் என மொத்தம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். வாக்குப்பதிவின் முடிவில், 11,19,272 ஆண்கள், 12,05,420 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 319 பேர் என மொத்தம் 23 லட்சத்து 25 ஆயிரத்து 11 பேர் வாக்களித்து இருந்தனர். இதன் மூலம் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணி நடைபெற்றது. இதில் இறந்த வாக்காளர்கள், இரட்டைப்பதிவு என மொத்தம் 6½ லட் சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இது மொத்த வாக்காளர் களில் 20 சதவீதம் ஆகும். இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதன் காரணமாக முன்எப்போதும் இல்லாத வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் நன்றாக அதிகரித்து உள்ளது.
கோவை வடக்கு தொகுதியில் 75 சதவீத வாக்குகள் பதிவானது. மற்ற 9 தொகுதிகளிலும் 82 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி உள்ளது. குறிப்பாக கவுண்டம்பாளையம் தொகுதியில் 4 லட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். மிகப்பெரிய தொகுதியான இங்கு 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் வாக்களித்து உள்ளனர். இது 85 சதவீதம் ஆகும்.
கோவை வடக்கு தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கடந்த 2 மாதங்களாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம். இதனால் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாக்கா ளர்களிடம் அதிகரித்து உள்ளது. அதற்குரிய பலன் ஓட்டு சதவீதம் அதிகரித்ததன் மூலம் தெரிய வந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.