சென்னை,
சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மேலும் 42 ரிசார்ட்டுகளை மூடி சீல் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை ஐகோர்ட்டில் வனத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் சட்டவிரோத ரிசார்ட்டுகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனால், மலைப்பகுதியின் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவையை சேர்ந்த கற்பகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சொக்கலிங்கம், ஒரு சில ரிசார்ட்டுகள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான ரிசார்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.
அப்போது, வனத்துறை சார்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ‘சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு ஆசனூர், கேர்மங்கலம், தலமலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டதாகவும்; இதில் 42 ரிசார்ட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
'இதுதவிர, மேலும் 42 ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், சட்டவிரோதமாக செயல்படும்பட்சத்தில் ரிசார்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணை மூன்று வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.