தமிழக செய்திகள்

கடந்த 11 ஆண்டுகளில் 42 ஆயிரம் நவீன இலகுரக ரெயில் பெட்டிகள் தயாரிப்பு

இந்தியா முழுவதும் இயக்கப்படும் பல்வேறு முக்கிய ரெயில் பெட்டிகள் எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

இந்திய ரெயில்வேயில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்.எச்.பி. என்னும் நவீன இலகுரக ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த பெட்டிகள் விபத்துக்காலங்களில் சிதைவதைத் தடுக்கும் 'ஆன்டி-டெலஸ்கோபிக்' வசதி கொண்டவை. இந்தபெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது. அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

அதிக இடவசதி, அத்துடன் சொகுசு இருக்கைகள், மொபைல் போன் சார் ஜிங் வசதி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். எல்.எச்.பி 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் 80 இடங்களும், ஏ.சி. பெட்டியில் தூங்கும் வசதி கொண்ட 72 இடங்களும் இருக்கும். இந்த பெட்டிகள் தற்போது தயாரிக்கப்படும் அனைத்து புதிய ரெயில்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு தற்போது எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் இயக்கப்படும் பல்வேறு முக்கிய ரெயில் பெட்டிகள் எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வகை பெட்டிகள் தயாரிக்கும் பணியில் இந்தியாவில் உள்ள ஐ.சி.எப். உள்பட 3 ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஈடுபடுகிறது.

குறிப்பாக, 2004-14-ம் ஆண்டு வரையில் 2,337 எல்.எச்.பி. பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, எல்.எச்.பி. பெட்டிகள் தயாரிக்கும் பணி வேகமெடுத்தது. அந்த வகையில், கடந்த 2014-25-ம் ஆண்டு வரை யில் 42 ஆயிரத்து 677 எல்.எச்.பி. பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரையில் பழைய பெட்டிகள் நீக் கப்படாமல் இருக்கும் ரெயில்களிலும் விரைவில் நவீன இலகுரக பெட்டிகள் இணைக்கப்படும் எனவும், அதற்கு ஏற்றவாறு இந்த பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.