திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் கனந்தம்பூண்டி புறவழிச்சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து புதுச்சேரி நோக்கி சரக்கு ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியின் கிளீனருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மேற்கு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த கிளீனரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பை சீர் செய்து கொண்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை வேகத்தை குறைத்து செல்லும்படி சைகை மூலம் அறிவுறுத்தி கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரின் வேகத்தை குறைக்க சொல்லி போலீசார் சைகை காட்டினர். போலீசாரை கண்ட டிரைவர் காரின் வேகத்தை குறைக்காமல் வந்து சாலையின் ஓரத்தில் நின்றிருந்த போலீசாரின் வாகனத்தை இடிப்பது போல் சென்று முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதிவிட்டு காரை நிறுத்தினார்.
உடனடியாக போலீசார் காரின் டிரைவரை அழைத்தபோது அங்கிருந்து அவர் தப்பியோடினார். காரின் டிரைவர் ஓடுவதை கண்ட போலீசார் உடனடியாக அவரை விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர். அதற்குள் டிரைவர் சமுத்திரம் ஏரி வழியாக சென்று தப்பி ஓடி விட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரை சோதனை செய்தனர்.
அப்போது காரில் பெங்களூருவில் இருந்து மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 444 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்கா பொருட்களுடன் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.