சென்னை,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45-ஆம் நினைவு நாளான இன்று அவரது நினைவுகளை அரசியல் கட்சி தலைவர்கள் போற்றி வருகின்றனர். அதன் விபரம் வருமாறு;
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
”தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 45-ஆம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவருக்கு எனது வணக்கங்களையும், மரியாதையையும் செலுத்துகிறேன்.
தமிழ்நாடு மற்றும் தமிழர் நலன் சார்ந்த வரலாற்றை சி.பா.ஆதித்தனாரை விலக்கி விட்டு எழுத முடியாது. தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான பணிகளை அவர் செய்தார். தினத்தந்தி நாளிதழைத் தொடங்கிய அவர், அதன் வாயிலாக தமிழர்களின் குரல்களை எதிரொலித்தார். அவரது நினைவு நாளில் அவரது இதழியல் மற்றும் மக்கள் பணிகளை போற்றுவதுடன், அவற்றை நாமும் தொடர உறுதியேற்போம்!”
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தினத்தந்தி நாளிதழைத் தோற்றுவித்து பத்திரிகை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவரும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பத்திரிகைத் துறையின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவருமான தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் நினைவுதினம் இன்று.
பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக, பேரவைத் தலைவராக என பல்வேறு வழிகளில் தமிழர்களின் அடையாளத்தையும், தன்னம்பிக்கையையும் வலுப்படுத்த தன்னுடைய எழுத்துக்களாலும், செயல்பாடுகளாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஐயா சி.பா ஆதித்தனார் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..! அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு அரசியல் இயக்கம் கண்ட தமிழ்த்தேசியர்..!
‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கி பாமரரும் உலகியலை அறியும் வகையில் எளிமையான உரைநடையில் செய்திகளை வழங்கி வாசிப்புத்திறனை வளர்த்தெடுத்த பெருமகன்..! ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உச்சத்தில் இருந்த காலத்தில் எதற்கும் அஞ்சா நெஞ்சுரத்தோடு விடுதலைச் செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்த தீரர்..!
இந்தித்திணிப்பு எதிர்ப்புப்போரில் பங்குகொண்டு சிறைப்பட்ட மொழிப்போர் வீரர்..! தமிழீழ விடுதலையை முழுமையாக ஆதரித்து தமிழ்நாட்டிலிருந்து முதன்மை குரல் கொடுத்த தனிப்பெருந்தலைவர்..! கபடி, சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் தொன்ம விளையாட்டுகள் அழிந்துவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும் அரும்பணியாற்றிய பெருந்தகை..! நாம் தமிழர் கட்சியின் நிறுவனர்! தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுகிற இந்நாளில், இன விடுதலை எனும் உயரிய இலக்கை அடைய இடையறாது பாடுபடுவோம் என உறுதியேற்போம்!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ் பத்திரிகைத்துறையில் புரட்சியை ஏற்படுத்தி, பொதுமக்களின் குரலாக விளங்கிய இதழியல் முன்னோடி சி.பா. ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள் இன்று. தமிழின் வளர்ச்சிக்கும், சமூக விழிப்புணர்வுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது.
‘தினத்தந்தி’ மூலம் செய்திகளை எளிய தமிழில் மக்களிடம் கொண்டு சென்ற அவர், அரசியல், சமூக மற்றும் கல்வித் துறைகளிலும் தனித்துவமான சேவையை ஆற்றினார். தமிழ் மொழிக்கும் தமிழ் சமூகத்திற்கும் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த அன்னாரின் நினைவுகளை மரியாதையுடன் போற்றுவோம்.