தமிழக செய்திகள்

49-வது பிறந்தநாள்: 27-ந் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் ராஜா அண்ணாமலைபுரம் குறிஞ்சி இல்லத்தில் பொதுமக்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொள்கிறார்.

சென்னை,

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்தநாள் நாளை மறுநாள் (27-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் அவர் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பெற்றுக்கொள்கிறார்.

குறிஞ்சி இல்லத்தில் சந்திப்பு

இதுகுறித்து தி.மு.க. இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளான வருகிற 27-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள குறிஞ்சி இல்லத்தில் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொள்கிறார்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை

பிறந்தநாளையொட்டி 27-ந் தேதி காலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெறுகிறார்.

அதன்பிறகு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துகிறார். அங்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

தி.மு.க.வினர் கொண்டாட்ட ஏற்பாடு

இதைத்தொடர்ந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பெற்றுக்கொள்கிறார்.

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தி.மு.க.வினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதையொட்டி, பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் விளையாட்டுப் போட்டிகள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT