சென்னை,
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குடிநீர் தேவை மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர தினசரி நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர், மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து நெம்மேலி அடுத்த பேரூரில் 400 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலைய பணிகளும் நடந்து வருகின்றன.
இதனை தொடர்ந்து தற்போது மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் 400 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலையம் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள் ளது. இது சென்னையில் அமைய உள்ள 4-வது கடல் நீரை குடிநீராக்கும் நிலையமாகும்.
இந்த பணிக்கான முன்சாத்தியக்கூறு ஆய்வுகளை நடத்துதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், ஒப்பந்த ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் ஒப்பந்தங்களை மதிப்பீடு செய்தல் ஆகிய வற்றுக்கான கலந்தாலோசகரைத் தேர்ந்தெடுக்கும் பணிக்கு பன்னாட்டு ஒப்பந்த செயல்முறையின் மூலம் தேசிய மற்றும் பன்னாட்டு கலந்தாலோசகர்களிடமிருந்து முன்மொழிவுகளை சென்னை குடிநீர் வாரியம் வரவேற்கிறது. ஒப்பந்த நிபந்தனை 5 www.cmwssb.tn.gov.in, www.tntenders.gov.in இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஒப்பந்த பாதுகாப்பு தொகை ரூ.2.50 லட்சம் செலுத்த வேண்டும். ஒப்பந்தங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 22-ந்தேதி கடைசி தேதியாகும். தொடர்பு விவரங்கள் பெற secandm@gmail.com இணையதளத்தில் பெறலாம் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.