திண்டுக்கல்,
மதுரை மாவட்டம் காதைக்கிணறு கிளாசிக்நகரை சேர்ந்தவர் விஜய்கிருஷ்ணன் (32 வயது). இவரது மனைவி சாந்தினி (29 வயது). இந்த தம்பதி மதுரையில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். மேலும் அந்த நிறுவனத்தில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு தொடங்கி குறுகிய கால, நீண்ட கால வைப்புத்தொகை வைத்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு மாதாந்திர சீட்டில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகளும் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவன நிர்வாகிகள் தெரிவித்த கவர்ச்சிகரமான வட்டி விகிதம், கூடுதல் வருமான திட்டங்களை உண்மை என நம்பிய பொதுமக்கள், குறுகிய மற்றும் நீண்ட கால வைப்புத் தொகை, மாதாந்திர சீட்டு உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்களில் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரன் (44 வயது) என்பவரும், மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தார். ஓராண்டு நிறைவடைந்ததும் அவருக்கு ரூ.36 ஆயிரம் முதிர்வு தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கூறியது போல் பணத்தை கொடுக்கவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதையறிந்து அதிர்ச்சியடைந்த முனீஸ்வரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் விஜய்கிருஷ்ணன், அவருடைய மனைவி மற்றும் நிறுவன பங்குதாரர்களான ஊட்டியை சேர்ந்த ரமேஷ் (48 வயது), மதுரையை சேர்ந்த சுப்பிரமணி (53 வயது), ஜெய்கணேஷ் (45 வயது) உள்பட 8 பேர் சேர்ந்து மொத்தம் 842 பேரிடம் ரூ.13 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விஜய்கிருஷ்ணன், ரமேஷ் உள்பட 4 பேரை கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் விஜய்கிருஷ்ணனின் மனைவி சாந்தினி, திருச்சி மாவட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று திருச்சிக்கு விரைந்து சென்று சாந்தினியை கைது செய்தனர். பின்னர் அவரை திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரையில் உள்ள பெண்களுக்கான சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.