திருப்பூர்,
திருப்பூர் கோவில் வழி -பெருந்தொழுவு சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த காரில் 15 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத் தினார்கள்.
இதில் அவர்கள், தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த சிவா (வயது 35) மற்றும் திருப்பூர் காங்கயம் பகுதியை சேர்ந்த சரவணன் (39) என்பதும், இவர்கள் 2 பேரும் வெளி மாவட்டங்களில் இருந்து புகையிலை பொருட்கள் வாங்கி வந்து, திருப்பூரில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவந்த சரவணன், சிவா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், அவினாசி நடுவச்சேரி அருகே ஒச்சாம்பாளையம் பகுதியில் மது விற்றதாக அவினாசி பட்டறை பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (30) என்பவரை அவினாசி போலீசார் கைது செய்து, 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் ஆட்டோவில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சரபன் பந்த்ரா (27) என்பவரை வடக்கு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 360 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் ரெயில் நிலையம் பகுதியில் புகையிலை விற்றதாக பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சு கண்டகரி (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.