தமிழக செய்திகள்

வீடு புகுந்து டிரைவர் உள்பட 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 5 சிறுவர்கள் கைது

எட்டயபுரம் பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால், வீடு புகுந்து டிரைவர் உள்பட 2 பேரை 5 சிறுவர்கள் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால், வீடு புகுந்து டிரைவர் உள்பட 2 பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 5 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வடக்கு ரதவீதியைச் சேர்ந்த ராமர் மகன் ஜெயக்குமார்(எ) சைமன் (வயது 54). இவர் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான எட்டயபுரம் தெற்கு ரதவீதியைச் சேர்ந்த கதிரேசன்(50), அப்பகுதியில் மின்சாதன பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார்.

வீடு புகுந்து 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

நேற்று மதியம் ஜெயக்குமார் தனது வீட்டில் கதிரேசனுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு 2 பைக்குகளில் 5 சிறுவர்கள் வந்து இறங்கினர். கையில் அரிவாள்களுடன் வீட்டிற்குள் கும்பலாகப் புகுந்த அவர்கள், அங்கிருந்த ஜெயக்குமார், கதிரேசன் ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டினர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

அந்த 2 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வரவே, 5 சிறுவர்களும் அங்கிருந்து பைக்குகளில் ஏறி தப்பிச் சென்றனர். பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய 2 பேரையும் மீட்ட பொதுமக்கள், எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5 சிறுவர்கள் கைது

இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், எட்டயபுரம் மற்றும் கோவில்பட்டியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய 5 சிறுவர்களை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

அதிவேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் முன்விரோதம்

போலீசாரின் விசாரணையில் கடந்த மாதம் தனது தலைவரின் குருபூஜை நாளன்று கைதான சிறுவர்களில் 3 பேர் வடக்கு ரதவீதியில் பைக்குகளில் அதிவேகமாகச் சென்றுள்ளனர். இதனை ஜெயக்குமார் கண்டித்துள்ளார். இதனால் உண்டான முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தால், நேற்று ஜெயக்குமாரையும், தடுக்க முயன்ற கதிரேசனையும் அரிவாளால் வெட்டியதாகச் சிறுவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். பட்டப்பகலில் வீடு புகுந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் எட்டயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT