தமிழக செய்திகள்

5 தொகுதி இடைத்தேர்தல்: தீவிரம் காட்டும் தவெக, திமுக; பின்வாங்கும் அதிமுக

பெரம்பூர் தொகுதியை முதல்-அமைச்சர் விஜய் வைத்துக்கொண்டதால் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது.

சென்னை,

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல்

2026 சட்டசபை தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைந்த பிறகும், தமிழக அரசியலில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. எதிர்பாராத தோல்வி தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் புரட்டிப்போட்டு இருக்கிறது. தேர்தல் தோல்வியால் 2 ஆக உடைந்த அ.தி.மு.க. மீண்டும் ஒட்டிக்கொண்டாலும், அ.தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி பூசல் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது.

அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து, த.வெ.க.வில் தங்களை இணைத்துக்கொண்ட அதிர்ச்சியில் இருந்து அ.தி.மு.க. இன்னும் மீளவில்லை.

இன்னும் யார், யார் அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க. பக்கம் கடைக்கண் பார்வையை திருப்புவார்களோ என்ற சந்தேகத்திலேயே அ.தி.மு.க. தலைமை இருந்து வருகிறது. த.வெ.க.வால் தி.மு.க. தன் கூட்டணி கட்சிகளை இழந்தும், அ.தி.மு.க. தன்னையே இழந்து நிற்கும் நிலையும் அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளது.

5 தொகுதி இடைத்தேர்தல்

இந்த சூழ்நிலையில் தான் விரைவில், திருச்சி கிழக்கு. அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம். திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தவரையில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்ற தொகுதி. பெரம்பூர் தொகுதியை அவர் வைத்துக்கொண்டதால் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது.

ஏற்கனவே த.வெ.க.வுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில் இந்த 5 தொகுதிகளிலும் வென்றால், த.வெ.க.வின் பலம் 112 ஆக உயரும். விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தடையில்லா ஆதரவு இருப்பதால் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று த.வெ.க. திட்டமிட்டுள்ளது. எனவே தான், த.வெ.க. இந்த 5 தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண தீவிரம் காட்டி வருகிறது.

சந்திக்கலாமா? வேண்டாமா?

இதற்கிடையே, 5 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த தி.மு.க.வும் முடிவு செய்துள்ளது. கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு இடைத்தேர்தலை சந்திப்பது முக்கியம் என்று தி.மு.க. கருதுகிறது. இதற்காக கட்சி நிர்வாகிகளிடம் தி.மு.க. தலைமை கருத்து கேட்டு வருகிறது. இந்த 5 தொகுதி இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே தி.மு.க.வின் வலிமையை நிரூபிக்க முடியும் என்று தி.மு.க. கருதுகிறது. எனவே அதற்கேற்ப வேட்பாளர் தேர்வை முன்னெடுக்கவும் திட்டமிட்டு இருக்கிறது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், தொடர் தோல்வி, உட்கட்சி பிரச்சினையால் 5 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே இருந்து வருகிறது. மீண்டும் தோல்வி ஏற்பட்டால், கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சமும் அ.தி.மு.க. தலைமையை யோசிக்க வைத்துள்ளது. எனவே தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிக்கலாமா? என்று அ.தி.மு.க. தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி, பா.ஜனதா ஆகிய கட்சிகளும் இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து யோசித்து வருகிறது. இதற்காக தங்களது கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை கூட்டவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு இருக்க தமிழக அரசியல் களத்தில் விரைவில் இடைத்தேர்தல் பரபரப்பு தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.