சென்னை,
அசாமில் இருந்து தமிழக கோவில்களுக்கு 5 யானைகள் கொண்டு வரப்படுகின்றன. அதன்படி துர்கா, ஹிராலால், சிவா, ரூப்சிங் மற்றும் பிஜூலி ஆகிய 5 யானைகளை அசாமில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வர வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து தலைமை வனவிலங்கு காப்பாளரிடம் கேட்டபோது, யானைகளின் உரிமையாளர் மற்றும் பிற ஆவணங்கள் போன்றவை அசாம் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், யானைகளை இடமாற்றம் செய்வதற்கான 2024-ம் ஆண்டு விதிகளின்படி இந்த இடமாற்றம் நடைபெறுவதாக வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ஆனால் அதிலும் ஒரு சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. துர்கா என்ற 5 வயது யானைக்கான ஆய்வு மற்றும் இடமாற்றம் குறித்த பரிந்துரை, ஒரே நாளில் முடிக்கப்பட்டது குறித்து எல்சா அறக்கட்டளையை சேர்ந்த பிரகாஷ் சாஷா கேள்வி எழுப்பியுள் ளார். செப்டம்பர் 4-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு ஆய்வு தொடங்கப்பட்டு, அதே நாள் இரவு 9 மணிக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் துர்கா யானை 3 ஆயிரம் கி.மீ. பயணத்தை மேற்கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று வரவுள்ளதாக தெரிகிறது. இது அசாம் மாநிலத்தை சேர்ந்த புன்யா பெகு என்பவருக்கு சொந்தமான யானையாகும்.