நாகர்கோவில்,
அசாமில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சுமார் 2.5 மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அசாம் மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி உள்ளிட்ட சில பகுதிகளுக்கு ரெயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாகத் தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை சுமார் 9.20 மணியளவில் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் அசாமில் இருந்து நாகர்கோவிலை வந்தடைந்தது. பின்னர் ரெயிலின் உள்ளே சுத்தம் செய்வதற்காக ரெயில் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
ரெயில்வே துப்புரவுப் பணியாளர்கள் ரெயிலில் ஏறி சுத்தம் செய்தனர். அப்போது ரெயிலின் பொதுப்பெட்டியில் கழிவறைக்கு அருகில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. உடனே துப்புரவுப் பணியாளர்கள் அந்த பையை எடுத்து ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் 6 பொட்டலங்கள் இருந்தன. அந்த பொட்டலத்தில் சுமார் 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா இருந்தது. இதுபற்றி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்த போலீசார் 5 கிலோ கஞ்சாவை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து, கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.