கொள்ளை நடந்த வீடு 
தமிழக செய்திகள்

திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.5 லட்சம் பணம், 60 சவரன் நகைகள் கொள்ளை

கொள்ளையர்கள் கெளசல்யாவின் கழுத்திலிருந்த தாலிச்செயினையும் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சென்னை ,

திருவள்ளூர் மாவட்டம், அத்தங்கிகாவனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75), விவசாயி. இவர் தனது மனைவி கெளசல்யாவுடன் (வயது 70), வசித்து வந்தார். இவரது பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

நகை-பணம் திருட்டு

நேற்று அதிகாலையில் கொள்ளைக்கும்பல், அந்த தம்பதியர் வசிக்கும் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர். அப்போது ராஜகோபாலும் அவரது மனைவியும் அந்த வீட்டின் ஒரு அறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

வீட்டிற்குள் வந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5 லட்சம் பணத்தை திருடிவிட்டு, அந்த தம்பதியினர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தனர்.

தப்பி ஓட்டம்

கொள்ளையர்கள் வந்த சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் எழுந்தனர். உடனே கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கினர். பின்னர் கெளசல்யாவின் கழுத்திலிருந்த தாலிச்செயினையும் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.