தமிழக செய்திகள்

நகை கொள்ளை வழக்கில் 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் நடந்த நகை கொள்ளை வழக்கில் கோயம்புத்தூர், ஏரல் பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் நடந்த நகை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவைகுண்டம் சார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நகை கொள்ளை வழக்கில் 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஏரல், இடையற்காடு பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த (8 சவரன் தங்க நகை) கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்களான குணசிங் மகன் டேவிட் (வயது 38), முபாரக் மகன் அப்பாஸ்(30), அப்பாஸ் மகன் முகமதுரபிக்(31), மற்றொரு குணசிங் மகன் சஞ்சய்(44) மற்றும் ஏரல் கோவங்காடு பகுதியைச் சேர்ந்த லிங்கபாண்டியன் மகன் மகேஸ்வரன்(41) ஆகிய 5 பேரையும் ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

7 ஆண்டுகள் சிறை தண்டனை

இது தொடர்பான வழக்கின் விசாரணை ஸ்ரீவைகுண்டம் சார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி பர்ஷாத் பேகம் நேற்று மேற்சொன்ன டேவிட், சஞ்சய், அப்பாஸ், முகமதுரபிக் மற்றும் மகேஸ்வரன் ஆகிய 5 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.