தமிழக செய்திகள்

ஏப்ரல் 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பல்வேறு வரிகளை பொதுமக்கள், வணிகர்கள் உடனடியாக செலுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பல்வேறு வரிகளை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் உடனடியாக செலுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குத்தகை தொகை மற்றும் உரிமைத் தொகை உள்ளிட்ட வரிகளை நிலுவையின்றி செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரியினை வரும் 30-4-2026-க்குள் செலுத்தும் வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தச் சலுகையானது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வரிகளை எளிமையான முறையில் செலுத்த மாநகராட்சி பல்வேறு வசதிகளை செய்துள்ளது.

நேரடியாக: மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள்.

இணையதளம் வழியாக: https://tnurbanepay.tn.gov.in என்ற முகவரி மூலம் 'Quick Payment' வசதியைப் பயன்படுத்தலாம்.

செயலிகள்: TN Urban Esevai ஆண்ட்ராய்டு ஆப் மற்றும் Google Pay, PhonePe, Paytm, Fedmobile போன்ற UPI செயலிகள் மூலமாகவும் எளிதாகச் செலுத்தலாம்.

எதிர்காலத்தில் வரி செலுத்துவதை மேலும் எளிதாக்கும் வகையில், வரி விதிப்புதாரர்களின் கைபேசி எண்களை சொத்துவரி கணக்குடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது சரியான கைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி மைய அலுவலகம் அல்லது மண்டல அலுவலகங்களைத் தொடர்புகொண்டு உறுதிசெய்திட வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.