சென்னை,
சென்னையில் கல்லூரி மாணவனை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில் மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் அபுபக்கர் சித்திக். இவருக்கும் சக கல்லூரி மாணவர்கள் சிலருக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகே நடைபெற்ற டிஜே (DJ) நிகழ்ச்சியின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி இரவு, அபுபக்கர் சித்திக் தனது நண்பருடன் லயோலா கல்லூரி அருகே உள்ள ஸ்கூல் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அபுபக்கரின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, மற்றொரு காரில் வந்த கும்பல் அபுபக்கரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் அபுபக்கரின் முன் பல் உடைந்ததோடு, கைவிரலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த நுங்கம்பாக்கம் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த அந்த கும்பல், காயமடைந்த அபுபக்கரை கே.கே. நகர் இ.எஸ்.ஐ.சி ஆஸ்பத்திரி அருகே இறக்கிவிட்டுத் தப்பியோடியது.
இதையடுத்து விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லயோலா கல்லூரி மாணவன் ஜே. சுதன், (பி.சி.ஏ) மற்றும் ராமாபுரம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஏ. அம்ரித், ஆர். கனிஷ்க், எம். அபுபக்கர், ஏ. சரண் சூர்யா, ஆகிய 5 பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய கவுரவ் மற்றும் எஸ்வின் ஆகிய 2 மாணவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.