ஈரோடு,
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூர் அயலூரை சேர்ந்தவர் வேலன் (வயது 49). கூலித் தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி சிறுவலூர் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்த 9 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்து வேலன் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேலனை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சொர்ணகுமார் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக வேலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.