கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மறவன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் லாக்கரில் வைக்கப்பட்ட 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கீழ ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபி பிரியங்கா (வயது 29). இவர் மறவன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரைப் பயன்படுத்தி வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அன்று தனக்கு சொந்தமான 50 பவுன் தங்க நகைகளை அந்த லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அன்று தனது நகைகளை திரும்ப எடுப்பதற்காக பிரியங்கா கூட்டுறவு சங்கத்திற்குச் சென்றார். அப்போது லாக்கரைத் திறந்து பார்த்தபோது, உள்ளே வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகைகளும் மாயமாகியிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், கூட்டுறவு சங்கத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளும் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளதால், சம்பவத்தின் மீதான சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.
தனது வாழ்வாதாரமான 50 பவுன் தங்க நகைகளை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட ஜெபி பிரியங்கா மற்றும் அவரது கணவர் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.