திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68 அடிக்கும் கீழ் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழக அசசை நம்பி செய்யப்பட்ட 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நேரடி நெல் விதைப்பு பயிர்கள் நீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளன என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு வைத்திருந்த விவசாயிகளை தவிர்த்து பிற பெரும்பாலான விவசாயிகளால் தண்ணீர் இல்லாததால் குருவை சாகுபடி பெரிய அளவில் பொய்த்து போன நிலையில் திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் மூன்று லட்சத்து 75 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக சம்பா மற்றும் தாளடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது நேரடி நெல்விதைப்பு மற்றும் நடவு பணிகள் மூலமாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் வெண்ணாறு, தஞ்சாவூர் வெண்ணாறு, தஞ்சாவூர் காவிரி ஆகிய முக்கிய ஆறுகள் வழியாகவும் அதிலிருந்து பிரியக்கூடிய பல பெரிய ஆறுகள், கிளை ஆறுகள் பாசன வாய்க்கால்கள் ஏ பி.சி.டி என வயல்களுக்கு கொண்டு செல்லும் வாய்க்கால்கள் மூலமாக தண்ணீரானது வயல்களுக்கு செல்லக்கூடிய நிலையில், தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு பகுதியில் ஆற்று நீர் பாய்ந்தும் பல பகுதியில் ஆற்று நீர் பாயாததாலும் வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பல்வேறு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் செல்லவில்லை.
இதனால் மாவட்டம் முழுவதும் திருவாரூர் கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50,000 ஏக்கருக்கும் மேலான நேரடி நெல் விதைப்பு பயிர்கள் தண்ணீருக்காக காத்திருந்து பயிர்கள் முளைத்து தண்ணீர் இன்றி வாடுவதாக வேதனை தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, திருவாரூர் மாவட்டத்தில் ஓடக்கூடிய பெரிய பெரிய ஆறுகளில் தண்ணீர் விடப்பட்டு அதன் பின்பு வயல்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய பிசிடி வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்கள்.
ஆகவே பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி சாகுபடி செய்து, தற்போது அவற்றைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் உள்ள விவசாயிகளின் துயரை அறிந்து உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.