சென்னை,
விவசாயத்திற்கு 50 ஆயிரம் மின்இணைப்புகள் வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் (2026-2027) 50 ஆயிரம் விவசாய மின்சார இணைப்புகள் வழங்க, மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.127.56 கோடி மானிய செலவை அரசு ஏற்க உள்ளது. விவசாய மின்சார இணைப்புகளை வழங்க கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான ரூ.750 கோடியை மின்சார வாரியம் ஏற்க உள்ளது.
மொத்தம் 50 ஆயிரம் இணைப்புகளில், இலவச சாதாரணப் பிரிவில் 20 ஆயிரம் இணைப்புகள், விரைவு (தட்கல்) சுயநிதித் திட்டத்தில் 25 ஆயிரத்து 282 இணைப்புகள், சுயநிதி பிரிவில் 3,372, அரசின் பிற திட்டங்களின் கீழ் 1,346 மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
இதன்படி விவசாய மின் இணைப்பு பெற, அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவோ அல்லது உங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இந்த 50 ஆயிரம் மின் இணைப்புகள் 3 முக்கிய விண்ணப்ப வழிகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொதுப்பிரிவு (சாதாரண முன்னுரிமை வரிசை), சுயநிதித் திட்டம் மற்றும் விரைவு சேவைத் திட்டமான 'தட்கல்' திட்டங்களில் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முன் ஒரு குறிப்பிட்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். தேவையான இடங்களில் அவை சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும் அல்லது சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பாக, விவசாயியின் அடையாளச்சான்றாக ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களாக விவசாய நிலத்திற்கான பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்கள். புல வரைபடமாக கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைந்துள்ள இடத்தை குறிக்கும் வரைபடம். கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு உங்களுக்கே சொந்தமானது என்பதையும், அதில் ஏற்கனவே மின் இணைப்பு எதுவும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தும் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் இணைக்க வேண்டும்.
தொழில்நுட்ப விவரங்களாக மோட்டார்-பம்புசெட்டின் குதிரைத்திறன் (எச்.பி) மற்றும் உரிமம் பெற்ற மின் பணியாளரிடம் இருந்து பெறப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் வசிக்கும் தாலுகாவில் உள்ள மின்சார வாரிய பிரிவு அலுவலகம் அல்லது நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு, விவசாய மின் இணைப்பிற்கான விண்ணப்பம்-2 ('Form-2') விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளவும்.
அந்தப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனுடன் ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும். பொறுப்பு அதிகாரியிடம் படிவத்தை சமர்ப்பித்து, முத்திரையிடப்பட்ட ரசீது அல்லது பதிவு எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பித்ததற்குப் பிறகு இளநிலை பொறியாளர் நிலத்திற்கு நேரில் வந்து, கிணறு, ஆழ்துளைக் கிணற்றைப் பார்வையிட்டு, சர்வே எண்களை சரிபார்த்து, தொழில்நுட்ப ரீதியாக இது சாத்தியமா? என்பதை உறுதி செய்வார்.
பொதுப்பிரிவின் கீழ் விண்ணப்பித்தால், விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட தேதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். தட்கல் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் (விண்ணப்பப்பதிவு திறக்கப்படும் காலங்களில்), நீண்ட காத்திருப்பு பட்டியலைத் தவிர்த்து, முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பைப் பெற, மோட்டாரின் குதிரைத்திறனுக்கு (எச். பி) ஏற்ப ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
அனுமதி வழங்கப்பட்டு, தொழில்நுட்ப ரீதியான ஒப்புதல் கிடைத்ததும், களப்பணியாளர்கள் வந்து மின் மீட்டரை பொருத்தி, மின் இணைப்பை வழங்குவார்கள் என்று எரிசக்திதுறை உயர் அதிகாரிகள் கூறினர்.