தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் 509 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் ஆறுமுகநேரி பகுதிகளில் ரோந்துபணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டும், கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டும் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் கடந்த 25ம் தேதி ஆறுமுகநேரி பகுதிகளில் ரோந்துபணி மற்றும் வாகனதணிக்கையில் ஈடுபட்டு, அங்கே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த திருச்செந்தூரை சேர்ந்த பாலகணேஷ் (வயது 36), காயல்பட்டினத்தைச் சேர்ந்த பீர்முகமது(37) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை செய்து அவர்களிடமிருந்து மொத்தம் சுமார் 355 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மதுரைவீரன் தலைமையில் போலீசார் கடந்த 27ம் தேதி திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபுரம் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் வந்த திருச்செந்தூரைச் சேர்ந்த விக்னேஷ்(27) என்பவரிடம் விசாரணை செய்ததில் அவர் சுமார் 159 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்ததையடுத்து உடனடியாக போலீசார் அந்த நபரை கைது செய்து புகையிலை பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 509 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கார், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.

மேற்சொன்ன 3 நபர்களை கைது செய்து புகையிலை பொருட்கள் மற்றும் கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த ஆறுமுகநேரி மற்றும் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசாரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.