திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே 52 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், கம்பத்தைச் சேர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு (NIB-CID) தனிப்படையினர் திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள வடமதுரை சந்திப்பு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 52 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாக தேனி மாவட்டம், கம்பம் கிராமசாவடி தெருவைச் சேர்ந்த சமாதானபிரபு (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக, 1985-ம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திண்டுக்கல் NIB-CID போலீசார் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களைச் சேகரித்து, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (28.10.2026) நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், சமாதானபிரபுவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த விசாரணை அதிகாரி மற்றும் NIB-CID குழுவினருக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்தார். சிறப்பான விசாரணை, ஆதாரங்கள் சேகரிப்பு மற்றும் நீதிமன்றத்தில் வழக்கைத் திறம்பட முன்னெடுத்ததையும் அவர் பாராட்டினார்.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் தயாரிப்பைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களைப் பின்வரும் வழிகளில் தெரிவிக்கலாம்:
கைப்பேசி செயலி: Drug Free TN
கட்டணமில்லா உதவி எண்: 10581
வாட்ஸ் அப்: 94984 10581
தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.