சென்னை,
தாம்பரம் விமானப்படை நிலையத்தில் 54 விமானிகள் பைலட் பயிற்றுவிப்பாளர் பயிற்சியை நிறைவு செய்தனர். இது தொடர்பாக இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 54 விமானிகள், தாம்பரம் விமானப்படை நிலையத்திலுள்ள 'விமானப் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பள்ளியில்' (FIS) நேற்று தங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் விமானப்படை மேற்குப்பகுதி தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் ஜார்ஜ் தாமஸ், முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விமானிகள் விமானிகள் பயிற்றுவிப்பாளர் பயிற்சியின் 161-வது தொகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
விமானப் பயிற்சி பயிற்றுவிப்பாளர்களாகத் தகுதி பெற்றவர்களில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 42 பேரும், இந்தியக் கடற்படையைச் சேர்ந்த 7 பேரும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 பேரும், இந்தியக் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர். மேலும், நட்பு நாடுகளைச் சேர்ந்த 3 விமானிகளும் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து தேர்ச்சி பெற்றனர்.
இப்பயிற்சி 13 ஏப்ரல் 2026 அன்று தொடங்கியது. 24 வாரங்கள் நடைபெற்ற கடுமையான பயிற்சியின் நிறைவாக இந்தச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது; இப்பயிற்சியில் 10 கட்டங்களிலான விமானப் பயிற்சியும், 200 மணி நேரத்திற்கும் மேலான தரைவழிப் பயிற்சியும் அடங்கும்.
பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு 'விமானப் பயிற்சி பயிற்றுவிப்பாளர்' என்பதற்கான சிறப்புச் சின்னம் வழங்கப்பட்டது. விமானப்பயிற்சி மற்றும் தரைவழிப் பாடங்களில் சிறந்து விளங்கிய விமானிகளுக்கு முக்கிய விருந்தினர் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.