தமிழக செய்திகள்

டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

டாஸ்மாக் மூலம் 100 க்கும் மேற்பட்ட மதுபான பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை,

கடைகளில் விற்பனைசெய்யப்படும் மதுபானங்களின் எண்ணிக்கையை அதிகரிக் கும் வகையில், புதிதாக 54 வகை உயர் ரக மதுபான பிராண்டுகளை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக பிற மாநிலங்களைச் சேர்ந்த மதுபான உற் பத்தியாளர்களிடம் இருந்தும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளி நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை கொள் முதல் செய்ய டாஸ்மாக் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட அதே வேளையில் குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகளை மறுசீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் தரமானதாக இல்லை என்று நீண்ட காலமாக மது பிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பல தரம் குறைந்த மதுவகைகள் கெமிக்கல் கலவையாகவே இருக்கிறது என விமர்சனமும் உள்ளது.

இந்நிலையில், மதுபிரி யர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்றுடாஸ்மாக் கடைகளில் உயர்ரக மதுபானங்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.

அதன்படி, மதுபானம் வாங்குபவர்களுக்கு இனி டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அதிகளவில் தரமான இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

அதன்படி, ஸ்காட்ச் விஸ்கி, ஒயின், வோட்கா, ஜின், ரம் மற்றும் பிரீமியம் பீர் போன்ற வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக விற்பனை செய்யப்படவுள்ளன.

பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் இந்த உயர்ரக மதுபானங்கள் நுகர்வோரின் நிதி நிலைக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் தற்போது தமிழ்நாட்டில் இதுவரை கிடைக்காத பல்வேறு பிரபலமான பீர் மற்றும் மதுபான பிராண்டுகள் விரைவில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

புதிய பிராண்டுகளின் இறுதிப்பட்டியல் விரை வில் வெளியிடப்படும் என்றும், அதன்பிறகு படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் மூலம் 100 க்கும் மேற்பட்ட மதுபான பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.

இருப்பினும், அவற்றில் குறிப்பிட்ட சில பிராண்டுகளுக்கு மட்டுமே நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அதே நேரத்தில், பிற மாநிலங்களில் விற்பனையாகும் பல பிரபலமான பீர் மற்றும் மதுபான வகைகள் தமிழ் நாட்டில் கிடைக்காததால், அவற்றை வாங்குவதற்காக புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு பலரும் செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையை மாற்றும் வகையில், சந்தை தேவையை ஆய்வு செய்ததுடன், நுகர்வோரின் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு கூடுதலாக 54 புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக பிரபலமான பீர் பிராண்டுகளான பீரா பிளாண்ட், பீரா ஒயிட், பீரா கோல்டு, லோன் வுல்ப் உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இறுதி ஒப்புதல் பெற்ற பிராண்டுகளின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், புதிய பிராண்டுகள் அறிமுகம் செய்வதன் மூலம் நுகர்வோருக்கு அவர்கள் விரும்பும் வகையிலான மதுபானங்கள் பலவற்றை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. மதுபான சந்தையில் போட்டியை அதிகரிப்பதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் சேர்த்து பிற மாநிலங்களைச் சேர்ந்த மதுபான உற்பத்தியாளர்களும் தமிழ்நாட்டிற்கு மதுபானங்களை விநியோகிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதன் மூலம் இதுநாள் வரை ஆதாயம் பெற்றுவந்த சில நிறுவனங்களின் ஆதிக்கம் குறைவதுடன், தரமான பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். மேலும், புதிய பிராண்டுகள் உடனடியாக விற்பனைக்கு வராது என்றும், உற்பத்தி, விநியோகம் மற்றும் தேவையான நிர்வாக அனுமதிகள் நிறைவடைந்த பிறகே படிப்படியாக டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மதுபானங்களுக்கான வரியை உயர்த்துவது தொடர்பாக அரசுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், சில்லறை விற்பனை விலையை உயர்த்தும் முடிவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் எஸ். விக்னேஷ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழ்நாட்டில் பீர் விற்பனைக்கு லிட்டருக்கு ரூ.15 மொத்த விற்பனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இந்த கட்டணம் குறைவாக இருப்பதுடன், வாட் உள்ளிட்ட வரி விதிப்பிலும் வித்தியாசம் இருப்பதால், சில வெளிமாநில நிறுவனங்கள் தமிழக சந்தையில் நுழைவதில் தயக்கம் காட்டி வருகின்றன.

எனினும், கலால் வரி விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக உள்ள நிறுவனங்களின் புதிய மதுபான பிராண்டுகளை படிப்படியாக டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.