சென்னை,
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு வாக்குச்சாவடிகளின் விவரங்களை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி 01.01.2027-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்த நடவடிக்கைகள் 15.10.2026 முதல் 04.01.2027 மேற்கொள்ளப்படுகின்றன. அந்நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் மற்றும் பிரிவுகளை உருவாக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
2. இது தொடர்பாக 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 38 மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்தி, அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள்/கோரிக்கைகளை பரிசீலித்த பிறகு. வாக்குச்சாவடிகளின் பட்டியலை தயாரித்துள்ளனர்.
3. மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை சீரமைக்க, தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குச்சாவடி மறுசீரமைப்பிற்கான முன்மொழிவுகளை பின்வரும் அளவுகோல்களின் அடிப்படையில் அனுப்பியுள்ளனர்:-
(i) வாக்காளர் எண்ணிக்கை 1,200 க்கும் அதிகமாக உள்ள பாகங்களில் புதிய வாக்குச்சாவடியை உருவாக்குதல்.
(ii) பாகங்களுக்கிடையே பிரிவுகளை மறுசீரமைத்தல் மற்றும் பிரிவுகளை உருவாக்குதல்
(iii) வாக்குச்சாவடிகளின் அமைவிடம்/கட்டிடம் மாற்றம்
(iv) வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம்
(v) வாக்குச்சாவடிகளை இணைத்தல்.
4. வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பின்வரும் அம்சங்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது:
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,200-க்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு வாக்காளரும் 2 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்பதற்காக, வாக்குச்சாவடி 2 கிலோமீட்டர் வட்டாரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையம், மருத்துவமனை, கோவில் அல்லது பிற மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் எந்த வாக்குச்சாவடியும் அமைக்கப்படவில்லை.
எந்தவொரு வாக்குச்சாவடியின் 200 மீட்டர் தூரத்திற்குள் அரசியல் கட்சி அலுவலகம் இல்லை.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் ஒரே பிரிவிலும், ஒரே இடத்திலும் வைத்திருக்கப்படுகின்றனர்.
5. மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல், தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. வாக்குச்சாவடிகளின் இறுதிப் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
6. வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு முன், மாநிலத்தில் 75,032 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு மாநிலத்தில் 75,088 வாக்குச்சாவடிகள் உள்ளன.
7. வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு, வாக்குச்சாவடிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.