தமிழக செய்திகள்

5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோவில் கைது

திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு கொத்தனார் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுகா, மாவடி பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 36), கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவர் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவி, பள்ளியில் தனது ஆசிரியையிடம் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார்.

உடனடியாக அந்த ஆசிரியை, மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் அளித்தார். குழந்தைகள் நல அலுவலர்கள் மாணவியிடம் முதற்கட்ட விசாரணை நடத்தி, நடந்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நலத் துறையினர் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொத்தனார் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.