சென்னை மாநகராட்சி 
தமிழக செய்திகள்

சென்னையில் ரூ.13.43 கோடியில் 6 மேம்பாலங்களின் பணிகள் நிறைவு

இரண்டாம் கட்டமாக, முதல்-அமைச்சரின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள 6 மேம்பாலங்களில் அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 16 மேம்பாலங்களில் மேம்படுத்துதல் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, ரூ.13.43 கோடி மதிப்பீட்டில் 6 மேம்பாலங்களில் பணிகள் முடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

16 மேம்பாலங்கள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டாரத்தில் 4 மேம்பாலங்கள், மத்திய வட்டாரத்தில் 10 மேம்பாலங்கள் மற்றும் தெற்கு வட்டாரத்தில் 2 மேம்பாலங்கள் என மொத்தம் 16 மேம்பாலங்களை அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தயார்நிலையில் உள்ளன

முதற்கட்டமாக 10 மேம்பாலங்களில் அழகுபடுத்தும் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் ராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட புரசைவாக்கத்தில் உள்ள டவுட்டன் சந்திப்பு மேம்பாலத்தில் ரூ.3.38 கோடி மதிப்பீட்டிலும், ராயபுரம் மண்டலம், வார்டு-62க்குட்பட்ட பாந்தியன் சாலை – காசா மேஜர் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111 மற்றும் 115க்குட்பட்ட பீட்டர்ஸ் சாலை – கான்ரான்ஸ்மித் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் ரூ.2.34 கோடி மதிப்பீட்டிலும், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-118க்குட்பட்ட டி.டி.கே. சாலை – சி.பி. ராமசாமி சாலை சந்திப்பில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் ரூ.4.16 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-122க்குட்பட்ட செனாடப் சாலை மற்றும் டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பில் உள்ள ஜி.கே. மூப்பனார் பாலத்தில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-134 மற்றும் 136க்குட்பட்ட ரங்கராஜபுரம் ரெயில்வே மேம்பாலத்தில் ரூ.2.63 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.13.43 கோடி மதிப்பீட்டில் 6 மேம்பாலங்களில் அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார்நிலையில் உள்ளன.

அழகுபடுத்தும் பணிகள்

இந்த மேம்பாலங்களில் பொதுமக்கள் அமரும் வகையில் ஆர்.சி.சி. இருக்கைகள், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் செடிகள் மற்றும் புல் நடுதல், பாதசாரிகளுக்காக வடிவமைக்கப்பட்ட நடைபாதை தளங்கள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள், தூண்கள் மற்றும் அடிப்பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட விளக்குகள், பொல்லார்ட் விளக்குகள் போன்ற அலங்கார விளக்குகள் பொருத்துதல், அழகியலை மேம்படுத்துவதற்கான கலை சிற்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட அழகிய வடிவமைப்புகளுடன் மேம்படுத்துதல் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்

மேலும், சிவானந்தா சாலை (MRTS) பாலம், வடக்கு உஸ்மான் சாலை – மகாலிங்கபுரம் சாலை சந்திப்பு பாலம், திருமலை சாலை சந்திப்பு-ஜி.என். சாலையில் உள்ள கலைவாணர் பாலம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை – டி.டி.கே. சாலை சந்திப்பு மேம்பாலம் ஆகிய 4 மேம்பாலங்களின் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. இப்பணிகள் 2026 டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

இரண்டாம் கட்டமாக, முதல்-அமைச்சரின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள 6 மேம்பாலங்களில் அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT