தமிழக செய்திகள்

ரெயிலில் சிக்கிய 6 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள்..போலீசார் தீவிர விசாரணை

2 ரெயில்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 5 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலம்,

சேலம் வழியாக சென்ற 2 ரெயில்களில் 6 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் சிக்கின. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோதனை

சேலம் ரெயில் நிலைய 4-வது நடை மேடையில் தன்பாத்- எர்ணாகுளம் செல்லும் ரெயில் நேற்று மாலை வந்து நின்றது. அப்போது கஞ்சா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதி மற்றும் போலீசார் கோபண்ணா ஏழுமலை, ரங்கன், சந்தோஷ் ஆகியோர் ரெயிலின் பின்புற பொதுப்பெட்டியில் சோதனை நடத்தினர்.

அப்போது பாத்ரூம் அருகில் கேட்பாரற்று கிடந்த கைப்பையை சோதனை செய்தபோது. அதில் 2 பொட்டலங்களில் 3 கிலோ 800 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கைக்காக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தன்பாத்- ஆலப்புழா

இதேபோல் தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் கஞ்சா தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் சேலம் ரெயில்வே காவல் உட்கோட்ட கஞ்சா தடுப்பு பிரிவு போலீசார் பாலமுருகன், இசையரசு மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் பிரவீன் ஆகியோர் ஈடுபட்டனர். ரெயிலின் முன்புற பொதுப்பெட்டியில் பாத்ரூம் அருகே கேட்பாரற்று கிடந்த தோள்பையை சோதனை செய்தபோது. அதில் 2 பொட்டலங்களில் 1.5 கிலோ கஞ்சா மற்றும் 6 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கைக்காக சேலம் மாநகர பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 2 ரெயில்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 5 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் 6 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.