தமிழக செய்திகள்

கேரளா சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையில் போலீசார் ரெயிலில் புகையிலை பொருட்களை கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம்,

சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் கடத்திய 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோதனை

வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளாவிற்கு செல்லும் ரெயில்களில் கஞ்சா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை சிலர் அவ்வப்போது கடத்தி வருகிறார்கள். இதனை தடுக்க ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் கஞ்சா சர்வசாதாரணமாக கடத்தி செல்லப்படுகிறது. தினமும் ஏதாவது ஒரு ரெயிலில் கஞ்சா, புகையிலை பொருட்கள் சிக்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று காலை டாடாநகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சேலம் ரெயில்வே தனிப்படையினர் பொம்மிடி ரெயில் நிலையத்தில் இருந்து ஏறி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த ரெயிலின் முன்பக்கம் உள்ள முன்பதிவில்லாத பெட்டியில் கழிவறை அருகில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அந்த பையை எடுத்து பிரித்து பார்த்தனர்

பறிமுதல்

அப்போது, பையில் 6 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர். ஆனால் புகையிலை பொருட்களை யார் கடத்தி வந்தார்கள்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையில் போலீசார் ரெயிலில் புகையிலை பொருட்களை கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT