சென்னை,
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 6 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 6 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது.
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் நெல் மூட்டைகளும், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பிற பாசன மாவட்டங்களில் 3 லட்சம் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அதனால் நெல்லை அறுவடை செய்த உழவர்கள் நெல் மூட்டைகளுடன் இரவு பகலாக கொள்முதல் நிலையங்களில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.
கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கிருந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது, கொள்முதல் நிலையங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாதது உள்ளிட்டவை தான் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் ஆகும். காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாள்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்படவில்லை என்றால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது.
கொள்முதல் நிலையங்களில் சேரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குகளுக்கும், அரவை நிலையங்களுக்கும் கொண்டு செல்வதற்கான வசதிகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களைப் போலவே நடப்பாண்டிலும் போதிய கிடங்கு வசதிகள் இல்லாததும், நெல் மூட்டைகள் உடனுக்குடன் அகற்றப்படாததும் நெல் கொள்முதலை பாதித்திருக்கிறது.
நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அடுக்கி வைக்கும் பணிகளில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி மிகவும் குறைவாக இருப்பதால், போதிய எண்ணிக்கையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிக்கு வருவதில்லை. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 30 சதவீத சுமை தூக்கும் தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வருவதால், ஒவ்வொரு நாளும் 900 முதல் 1,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுவதற்கு பதிலாக, 300 முதல் 400 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை அறுவடை இப்போது தான் தொடங்கியிருக்கிறது. அடுத்து வரும் நாள்களில் அறுவடை தீவிரமடையும் போது கொள்முதல் நிலையங்களில் இன்னும் பல மடங்கு நெல் மூட்டைகள் தேங்கும் நிலை உருவாகும். இந்த நிலைமையை மாற்ற கிடங்குகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.