திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஜவ்வாதுமலை பகுதியில் அரசுக்கு சொந்தமான வன நிலத்தை பட்டா போட்டு தருவதாகக் கூறி, மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம் வசூலித்த புகாரில் 3 வனச்சரகர்கள் உட்பட 6 வனத்துறை ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறை ஊழியர்கள் சிலர், அரசுக்கு சொந்தமான வன நிலங்களை குடியிருப்பு வகைமாற்றம் செய்து வீட்டு மனைப் பட்டா வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் ரூ.1 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு பட்டா எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வாங்காவிட்டால் காலி செய்ய நேரிடும் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து பழங்குடி மற்றும் மலைவாழ் மக்கள் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
எனவே வனத்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களின் முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து, லஞ்சம் பெற்ற வனச்சரகர்கள் மணிவண்ணன், ஆனந்தகுமார், வெங்கடேசன் மற்றும் வனத்துறை ஊழியர்கள், சரவணன், ஜெயக்குமார், சண்முகம் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.