தஞ்சாவூர்,
தஞ்சாவூர் அடுத்த வண்ணாரப்பேட்டை வயல்வெளிப் பகுதிகளில் அரிதாகக் காணப்படும் வண்ணத்தி நாரை பறவைகள் 6 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பறவை, பொதுவாக வட இந்திய மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது. வலசை பருவங்களில் சில சமயங்களில் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தோன்றினாலும், தஞ்சை மாவட்டத்தில், அதுவும் வலசை பருவம் முடிந்த பின்பும் இவ்வகை பறவைகள் காணப்படுவது மிக அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை கிராமம் அருகில் உள்ள வயல்வெளிகளில் இப்பறவைகள் காணப்பட்டதை, அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல்அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்ரீராம் முதலில் அவதானித்து உடனடியாக தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், அறக்கட்டளையின் ஆய்வுக்குழு மற்றும் புகைப்படக் கலைஞர்கள் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்று, பறவைகளை நேரில் பதிவுசெய்து புகைப்படங்களின் மூலம் ஆவணப்படுத்தினர். இதுகுறித்து அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனர் சதீஷ்குமார் கூறியதாவது:-
வண்ணத்தி நாரை என்பது நடுத்தர அளவிலான நீர்நிலப்பறவை ஆகும். இவை பொதுவாக திறந்த புல்வெளிகள், வயல்வெளிகள், ஆற்றங்கரைகள், குளங்கள் மற்றும் ஈரநிலப் பகுதிகளில் வாழ்கின்றன. முக்கியமாக மீன்கள், தவளைகள், சிறிய ஊர்வன, புழுக்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உணவாகக் கொண்டுள்ளன.
இவை பொதுவாக தனித்தனியாக அல்லது சிறிய கூட்டங்களாக காணப்படும். இனப்பெருக்க காலத்தில் உயரமான மரங்களில் கூடு அமைத்து 2 முதல் 4 முட்டைகள் வரை இடுகின்றன. இப்பறவைகள் சூழலியல் சமநிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த பறவை தற்போது காணப்பட்டுள்ள பகுதி, அதன் வாழ்விட விரிவாக்கம் அல்லது சுற்றுச்சூழல் மாற்றங்களின் தாக்கத்தை வெளிப்படுத்தும் முக்கிய குறியீடாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இப்பறவைகள் மேலும் எந்த பகுதிகளில் காணப்படுகின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்து, ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வகை அரிதான பறவைகள் காணப்படும் பகுதிகளை பாதுகாப்பது மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவது அவசியமானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.