வேலூர்,
வேலூர், காட்பாடி பகுதிகளில் நேற்று மயான கொள்ளை திருவிழா நடந் தது. விழாவை முன்னிட்டு மயான கொள்ளை திருவிழா குழுவினர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை ஊர்வலமாக மாலை முதல் வேலூர் புதிய பஸ் நிலைய பாலாற்றங்கரைக்கு கொண்டு வந்தனர். ஒவ்வொரு பகுதி தேராக பாலாற்றில் இறங்கி சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பின்னர் தேர்கள் அங்கிருந்து தங்கள் நிலையை நோக்கி புறப்பட்டன.
இந்த நிலையில் நேற்றிரவு 11.40 மணியளவில் கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் சூறையிடும் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாற்றில் இருந்து மேம்பால சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென தேர் நிலை சரிந்து கவிழ்ந்தது. இதில் தேரின் மீது அமர்ந்திருந்த 10-க்கும் மேற்பட்டோர் தேரின் அடியில் சிக்கினர். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி கூக்குரல் எழுப்பினர்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார். தீயணைப்புத்துறையினர், பொதுமக்கள் உடனடியாக அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிதுநேர போராட்டத்துக்கு பின்னர் தேரின் அடியில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 7-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தேர் கவிழ்ந்த தகவல் அறிந்தவுடன் கலெக்டர் சுப்புலெட்சுமி. போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தேர் கவிழ்ந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.