தமிழ்நாட்டு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் 
தமிழக செய்திகள்

தமிழ்நாட்டு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் 60 பேர் தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை

பயிற்சி தலைமை இயக்ககம் அறிவித்த 374 தேசிய முதலிடங்களில், 60 இடங்களை தமிழ்நாட்டை சேர்ந்த தொழிற்பயிற்சி மாணவ மாணவியர் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் 60 பேர் தேசிய அளவில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தொழிற்பயிற்சி

தமிழ்நாட்டில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 278 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 70 பொறியியல் மற்றும் 34 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தாண்டு சுமார் 46000 பயிற்சியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

19,209 மாணவர்கள்

புது டெல்லியில் உள்ள பயிற்சி தலைமை இயக்ககம் (DGT), ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து மாநிலங்களுக்கும் அகில இந்திய தொழிற் தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 19,209 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றதில் 91.90 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 10,186 மாணவர்கள் பங்கேற்று 77.16 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சாதனை

இத்தேர்வின் முடிவுகள் அக்டோபர் 2026-இல் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களில், ஒவ்வொரு தொழிற்பிரிவுக்கும் தேசிய அளவிலான முதலிடம் பெற்றவர்களை பயிற்சி தலைமை இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பயிற்சி தலைமை இயக்ககம் அறிவித்த 374 தேசிய முதலிடங்களில், 60 இடங்களை தமிழ்நாட்டை சேர்ந்த தொழிற்பயிற்சி மாணவ மாணவியர் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் 55 பேர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும், 5 பேர் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

தமிழ்நாடு இரண்டாம் இடம்

கடந்த ஆண்டில் 40 மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றதால் மாநில தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு நான்காம் இடத்தில் இருந்தது. இந்தாண்டு 60 மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பெற்றதன் காரணமாக அகில இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த வெற்றி, தமிழ்நாட்டின் தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்கப்படும் தரமான பயிற்சிக்கு சான்றாக அமைந்துள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT