தமிழக செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

அனல்மின் நிலையத்தில் நேற்று அதிகாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் அமைந்துள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில், முதல் அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

600 மெகாவாட் பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தலா 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்நிலையில், முதல் அலகில் 'பாய்லர் டியூப் பஞ்சர்' (Boiler Tube Puncture) ஏற்பட்டதால், நேற்று அதிகாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் சவால்

தற்போது கோடை வெயில் காரணமாக மாநிலம் முழுவதும் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டிருப்பது தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மின் உற்பத்தியை விரைவில் மீண்டும் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.