தமிழக செய்திகள்

நாகர்கோவில் அருகே தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகள் சாகடிப்பு; கோழிப்பண்ணை உரிமையாளரை பழிவாங்க நடந்த பயங்கரம்

தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோழிப்பண்ணை உரிமையாளரை பழிவாங்க இந்த பயங்கர செயலில் ஈடுபட்டுள்ளார்.

கோழிகள் செத்தன

நாகர்கோவில் அருகே காஞ்சிரங்கோட்டை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). மார்த்தால் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (28). உறவினர்களான இவர்கள் இருவரும் செண்பகராமன்புதூர் அருகே அவ்வையாரம்மன் கோவில் பின்புறத்தில் கால்வாய் கரையோரம் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து சுமார் 12 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு பண்ணையில் கோழிகள் சாரை, சாரையாக செத்து கிடந்தன.

விஷம் கலந்து சாகடிப்பு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோழிப் பண்ணை பராமரிப்பாளர் முருகன் உடனே சுரேஷ், ராஜனுக்கு தகவல் தெரிவித்தார். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு மொத்தம் 6 ஆயிரம் கோழிகள் செத்து கிடந்தது தெரியவந்தது.

கோழிகள் திடீரென செத்தது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் சுற்றி பார்த்தனர். அப்போது, கோழிப்பண்ணையில் தண்ணீர் தொட்டி அருகில் காலியான விஷ பாட்டில் ஒன்று கிடந்தது. அதில் இருந்த விஷம் தண்ணீரில் கலக்கப்பட்டு இருந்ததும், அந்த விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் தான் 6 ஆயிரம் கோழிகள் செத்ததும் தெரியவந்தது.

முன்விரோதத்தில் பயங்கரம்

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோத தகராறில் கோழிப்பண்ணை உரிமையாளர் சுரேஷை பழிவாங்க பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ் நகரை சேர்ந்த ஷாஜன் (32) என்பவர் கோழிகளை கொன்ற தகவல் வெளியானது. ராஜனும், சுரேசும் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்துவதற்கு முன்பாக அங்கு ஷாஜன் கோழிப்பண்ணையை நடத்தி வந்துள்ளார்.

அப்போது சில விஷயங்களில் சுரேஷ் இடைஞ்சலை ஏற்படுத்தியதாக ஷாஜன் நினைத்துள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு ஷாஜன், சம்பவத்தன்று இரவு கோழிப்பண்ணைக்குள் புகுந்து குடிநீரில் விஷம் கலந்து கோழிகளை கொன்றதாக தெரிகிறது. சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஷாஜனை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT