சென்னை,
சென்னை மாநகராட்சியின் சார்பில் 11.08.2026 அன்று தொடங்கிய வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாமின் மூலம் இதுவரை 60,216 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தகவல். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
சென்னை மாநகராட்சியில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொது மக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் கடந்த 11.08.2026 அன்று தொடங்கப்பட்டது.
இம்முகாமின் வாயிலாக திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை மற்றும் இராயபுரம் ஆகிய 4 மண்டலங்களிலும் உள்ள அனைத்து இடங்களிலும் உள்ள தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் உள்ள அனைத்து தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 60,216 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம்,
திருவொற்றயூர் மண்டலம் 11795
மணலி மண்டலம் 7207
தண்டையார்பேட்டை மண்டலம் 12684
இராயபுரம் மண்டலம் 8672
அம்பத்தூர் மண்டலம் 11895
மாதவரம் மண்டலம் 7963
மொத்தம் 60,216
தற்போது மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் தலா 10 குழுக்களை பயன்படுத்தி இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த 2 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் முடிவுற்றவுடன், பிற மண்டலங்களிலும் இம்முகாம் நடத்தப்பட்டு 50 வேலை நாட்களுக்குள் அனைத்து மண்டலங்களிலும் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்தும் செலுத்தப்படவுள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் மூலம் “வெறிநாய்க்கடிநோய் இல்லாசென்னை” என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தெரிவித்துள்ளார்.