தமிழக செய்திகள்

2026-ல் இதுவரை 61 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது: நெல்லை மாவட்ட எஸ்.பி. தகவல்

2026-ல் இதுவரை பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 11 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என நெல்லை மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 2026-ம் ஆண்டில் இதுவரை 27 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட மொத்தம் 61 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும், குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

61 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது:

அதன்படி 2026-ம் ஆண்டில் இதுவரை கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 31 பேர், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 11 பேர், போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 19 பேர் என மொத்தம் 61 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடும் நடவடிக்கை:

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களின் நலனை உறுதி செய்யவும், சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், கெட்ட நடத்தைக்காரர்கள், வழிப்பறி மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டத்தின் கீழ் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.