தமிழக செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 62 சதவீதம் இடங்கள் நிரம்பின

கடந்த ஆண்டைவிட இந்த வருடமும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

அரசு கலை, அறிவியல் கல்லூரி

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பி.பி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் சேர்ந்து படிக்க மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 19-ந் தேதி தொடங்கியது. வருகிற 31-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 110 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகள் படிப்பதற்கான விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது.

62 சதவீதம்

கடந்த ஆண்டைவிட இந்த வருடமும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உதவி பெறும் கல்லூரிகளுக்கு 15 சதவீதமும், தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு 10 சதவீதமும் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 62 சதவீதம் இடங்கள் நிரம்பியுள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 1,26,959 இடங்களில் 78,827 இடங்கள் நிரம்பியுள்ளன. மாணவர்கள் 31,235 பேர், மாணவிகள் 47,572 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.