சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேசையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள், உள்ளிட்ட 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, உள்ளிட்ட 12 வகையான பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் மேற்குறிப்பிட்ட 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை மாநகரை அழகுப்படுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப் பணியின் கீழ் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 01.06.2026 முதல் 30.06.2026 வரை 11,127 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 638 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 14,30,300/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக 01.06.2026 முதல் 30.06.2026 வரை பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விவரம் :
| மண்டலங்கள் | ஆய்வு எண்ணிக்கை | அபராதம் விதிக்கப்பட்ட நிறுவங்கள் | பறிமுதல் செய்யப்பட் ட பிளாஸ்டிக் | விதிக்கப்பட்ட அபராதம் (ரூபாய்) |
|---|---|---|---|---|
| திருவொற்றியூர் | 220 | 30 | 12 | 8,700 |
| மணலி | 140 | 15 | 5 | 9,100 |
| மாதவரம் | 397 | 106 | 26 | 46,400 |
| தண்டையார்பேட்டை | 230 | 43 | 33 | 1,00,800 |
| இராயபுரம் | 593 | 110 | 41 | 58,400 |
| திரு.வி.க. நகர் | 461 | 87 | 27 | 58,300 |
| அம்பத்தூர் | 293 | 94 | 34 | 73,400 |
| அண்ணாநகர் | 1,016 | 171 | 57 | 1,41,700 |
| தேனாம்பேட்டை | 1,636 | 200 | 97 | 1,27,300 |
| கோடம்பாக்கம் | 2,042 | 243 | 92 | 1,80,800 |
| வளசரவாக்கம் | 1,064 | 163 | 80 | 1,04,100 |
| ஆலந்தூர் | 493 | 97 | 26 | 65,500 |
| அடையாறு | 922 | 163 | 28 | 1,69,200 |
| பெருங்குடி | 1,041 | 238 | 62 | 2,18,100 |
| சோழிங்கநல்லூர் | 579 | 82 | 20 | 68,500 |
| மொத்தம் | 11,127 | 1,842 | 638 | 14,30,300 |
எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.