தமிழக செய்திகள்

அமோனியா வாயு கசிவு எதிரொலி: 68 அசாம் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

அமோனியா வாயு கசிவால் 15 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் 'புனித பீட்டர் பால்' என்கிற கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 16 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதற்கிடையே தொழிற்சாலையில் பணியாற்றிய 146 வடமாநில தொழிலாளர்கள் பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். முதற்கட்டமாக கடந்த 26-ந்தேதி அங்கு தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 59 பேர் அவர்களது விருப்பத்தின் பேரில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அசாம் அனுப்பி வைப்பு

இந்த நிலையில், நேற்று அசாம் மாநிலத்தை சேர்ந்த 44 ஆண்கள் மற்றும் 24 பெண்கள் என மொத்தம் 68 தொழிலாளர்கள் அவர்களது விருப்பத்தின் பேரில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவள்ளூர் வருவாய் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தல மையிலான அதிகாரிகள், தொழிலாளர்களை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கிருந்து அசாம் மாநிலம் செல்லும் ரெயிலில் அனுப்பி வைத்தனர்.

மேலும் பெரியபாளையத்தில் தங்கியுள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மீதமுள்ள தொழிலாளர்களையும் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.