மதுரை,
சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு, அவருடன் ஒரே பேட்ச்சில் பணியாற்றிய 6,971 காவலர்கள் இணைந்து ரூ.22 லட்சம் நிதி திரட்டி வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 28). இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த தமிழ்ச்செல்வனுக்கு மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த தமிழ்ச்செல்வனின் மறைவால், அவரது குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்தனர்.
இந்த நிலையில், தமிழ்ச்செல்வனுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் ஒரே பேட்ச்சில் பணியில் சேர்ந்த சக காவலர்கள், அவரது குடும்ப நிலையை அறிந்து உதவ முன்வந்தனர். இதற்காக அவர்கள் உருவாக்கிய ‘காவலர்கள் காக்கும் உறவுகள்’ என்ற வாட்ஸ்-அப் குழு மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2017 பேட்ச் காவலர்களிடம் நிதி திரட்டப்பட்டது. அதன்படி மொத்தம் 6,971 காவலர்கள் தங்களால் இயன்ற பணத்தை வழங்கி, குறுகிய காலத்தில் ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் நிதி திரட்டினர்.
இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சி மதுரை சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திரட்டப்பட்ட மொத்த நிதியும் தமிழ்ச்செல்வனின் குடும்ப எதிர்காலத்திற்காக வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன் விவரம் வருமாறு:-
தமிழ்ச்செல்வனின் 2 வயது மகனின் பெயரில் ரூ.14 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. அவரது மனைவி பெயரில் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. அவரது தாய் மற்றும் தந்தை பெயரில் தலா ரூ.2 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. உடனடி குடும்ப செலவுகளுக்காக ரொக்கமாக ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது. நெகிழ்ச்சிஒரே பேட்ச்சில் சேர்ந்த சக நண்பனின் குடும்பத்தை காக்க, தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் நிதியுதவி வழங்கிய
இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. நிகழ்ச்சியின் நிறைவாக மறைந்த காவலரின் நினைவாக டி.எஸ்.பி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.