சென்னை,
தமிழக அரசின் வங்கிக் கணக்கில்ரூ.22 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 7 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன. இந்த நிதி கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் பராமரிக்கப்பட்டு வந்த அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய் மோசடியாக மாற்றப்பட்டிருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மாதம் 12 முதல் 30-ஆம் தேதி வரை சைபர் மோசடி கும்பல் வங்கிக் கணக்கில் அத்துமீறி நுழைந்து, 46 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.22.30 கோடியை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். இதில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய 3 வட்டார வளாச்சி அலுவலகங்களின் பெயர்களில் உள்ள 'மேக்கர்', 'செக்கர்', 'பயனர்' விவரங்கள் இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடி தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், தகவல் தொழில்நுட்பச் சட்டம், மோசடி தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.30 கோடி இணையவழியில் மோசடி செய்த வழக்கில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி செய்த பணத்தை வங்கிக் கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்ய உதவியதாகக் கூறி, லோகநாதன், அண்ணாதுரை, செல்ல பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பணம் எவ்வாறு மாற்றப்பட்டது, இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 24 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட பணம் பின்னர் வேறு கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதா, பணத்தை எடுத்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.