தமிழக செய்திகள்

பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு: மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்..!

மேஜையின் அடியில் பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெ.ஜெ. ரவி நகர் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

மேஜைக்கு அடியில் பதுங்கிய பாம்பு

நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றனர். அப்போது 6-ம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்குள் சென்றபோது, மேஜையின் அடியில் பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

7 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது

இதுகுறித்து ஆசிரியர்கள் உடனடியாக திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வகுப்பறையில் பதுங்கியிருந்த சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பின்னர் அந்தப் பாம்பு அருகிலுள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக விடப்பட்டது.

கழிவுநீர் கால்வாயை தூர்வார கோரிக்கை

பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயை திருத்தணி நகராட்சி நிர்வாகம் முறையாக தூர்வாராமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பள்ளி வளாகத்திற்குள் வருவதாகவும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.