தமிழக செய்திகள்

திருநெல்வேலியில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் ஆலடிப்பட்டி ரெயில்வே நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் போலீசாரின் துரித நடவடிக்கையால் 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

கஞ்சா விற்பனை

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலடிப்பட்டி ரெயில்வே நிலையம் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அந்தோணிராஜ் (வயது 25) மற்றும் பாரதிகண்ணன்(23) ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 7 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், முக்கூடல் காவல் நிலைய கஞ்சா வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த மாஜி(எ) ராகுல் என்பவர் தற்போது ஒடிசா மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து தமிழகத்திற்கு கஞ்சா சப்ளை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரது தொலைபேசி எண்ணை நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்ததில், மேற்சொன்ன நபர்கள் அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

7 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது

இதனையடுத்து மேற்சொன்ன நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் ஆலடிப்பட்டி ரெயில்வே நிலையம் அருகே 7 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கங்கைகொண்டான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.