சென்னை,
வட மாநிலங்களிலிருந்து ரெயில்கள் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட மாநிலங்களிலிருந்து ரெயில்கள் மூலம் சென்னை, பெரம்பூர் ரெயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பெருநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், இன்று (வெள்ளிக்கிழமை) போலீசார் சில குறிப்பிட்ட பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த 2 நபர்களைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதித்தபோது, அதில் சட்டவிரோதமாக மறைத்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்த ககன் பகதூர் மற்றும் டேனியல் கஸ்கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்கள் வட மாநிலங்களிலிருந்து ரெயில் மூலமாக சென்னைக்கு இந்த போதைப்பொருளைக் கடத்தி வந்து, இங்குள்ள உள்ளூர் ஏஜென்ட்டுகளிடம் விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார், இந்த கஞ்சா சென்னையில் யாருக்கு சப்ளை செய்யப்பட இருந்தது என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.